அசத்தல் திட்டம்... அரசு பள்ளியில் சேர்த்தால் பெற்றோருக்கு ஊக்கத்தொகை!
தஞ்சாவூரில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்றில் ஆசிரியர்களுடன் முன்னாள் மாணவர்கள் இணைந்து புதுமையான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 55 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் வளர்ச்சிக்கு, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், முன்னாள் மாணவர்கள், தலைமை ஆசிரியருடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், 2021-2022 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கிய நிலையில், முன்னாள் மாணவர்கள் 10 பேர் தலைமையாசிரியர் சரவணனுடன் இணைந்து புதிதாக சேரும் மாணவர்களுக்கு பரிசுகளும், சலுகைகளும் வழங்கியதோடு, பெற்றோர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என முடிவு செய்தனர்.
அதன்படி புதிதாக இந்த கல்வி ஆண்டில் சேரும் மாணவர்களின் பெயரில் அஞ்சலகத்தில் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தும், பெற்றோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக குலுக்கல் முறையில் 10 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்குவதாக அறிவித்தனர். இதனால் அங்கு தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.