குரூப் 4 தேர்வு மையங்களுக்கு நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்
நாளை குரூப் 4 தேர்வு நடைபெறுவதை அடுத்து தேர்வு மையங்களுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
குரூப்-4 தேர்வு
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப்-4 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.
இந்த தேர்வு நாளை 7689 மையங்களில் நடைபெற உள்ளது.இந்த தேர்வை 22,02,942 பேர் எழுதவுள்ளனர். சென்னையில் மட்டும் 503 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு பணிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மேலும் தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க 534 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர்களின் கோரிக்கையின்படி தேர்வு மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.