ஆயுத பூஜைக்கு சொந்த ஊர் போறீங்களா..? போக்குவரத்துக் கழகம் சூப்பர் அறிவிப்பு!!
ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
ஆயுத பூஜை விடுமுறை
வரும் 23-ஆம் தேதி, 24-ஆம் தேதி ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை அதற்கு முன்னதாக சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வரவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேலைக்காக வெளிஊர் சென்றவர்கள் சொந்த ஊர் அதிகளவில் திரும்புவார்கள்.
இந்த விடுமுறைகளின் காரணமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதை தமிழகத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் மூன்று இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்
வேலூர், ஆரணி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், மற்றும் திருத்தணி செல்லும் பேருந்துகள் சென்னை பூந்தமல்லி பணிமனையில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தாம்பரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், வந்தவாசி, செஞ்சி வழியாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, சிதம்பரம், புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதே நேரத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக தஞ்சாவூர், திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், கோவை, பெங்களூரு உள்ளிட்டப் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, பெங்களூரு, கோவை, திருப்பூர் நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து வரும் 20ஆம் முதல் 22ஆம் தேதி வரை கூடுதலாக 2, 265 சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.