அரசு பள்ளிக்கு நிலத்தை கொடையளித்த ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

M K Stalin Tamil nadu
By Jiyath Jan 14, 2024 01:00 PM GMT
Report

அரசின் சார்பில் ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நிலம் தானம் 

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலைபார்த்த இவரது கணவர் உக்கிரபாண்டியன், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

அரசு பள்ளிக்கு நிலத்தை கொடையளித்த ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! | Special Award To Ayiammal Cm Stalin Announcement

வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி என்ற பூரணத்துக்கு கிடைத்தது. இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஆயி என்ற பூரணத்தின் மகள் ஜனனி (30) இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக ஆயி அம்மாள் வழங்கினார். கடந்த 5-ம் தேதி பள்ளியின் பெயரில் நிலத்தை பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார். 

சிறப்பு விருது 

இந்நிலையில் குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிக்கு நிலத்தை கொடையளித்த ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! | Special Award To Ayiammal Cm Stalin Announcement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அவர்கள்.

ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்.