மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் - சனிக்கிழமை சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி.
மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மசோதாக்கள் தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநருக்கு உச்சநீதிமன்ற கடும் கண்டனம் தெரிவித்து நவ.20ல் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 10க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி.
மசோதாக்களுக்கு ஒப்புதல் கோரிய வழக்கில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நிலுவையில் இருந்த மசோதாக்கள் தலைமை செயலகத்திற்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.
சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அப்போது, மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.
திருவண்ணாமலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் நிராகரித்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு விரும்புவதால் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.
ஆளுநர் நிராகரித்த மசோதாக்களை அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு அவர் ஒப்புதல் தந்தாக வேண்டும். குடியரசு தலைவர் பற்றியோ, ஆளுநர் பற்றியோ சட்டப்பேரவை கூடவில்லை.
நீட் மசோதாவையும் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம், அதை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு இறையாண்மை உள்ளது.
மக்களின் கருத்துக்களை அறிந்து சட்டங்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புகிறது அரசு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மசோதாக்களை நிறைவேற்றி அனுப்ப அதிகாரம் உள்ளது என்றார்.