இந்தியாவிலே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் - சபாநாயகர் அப்பாவு பெருமிதம்!
பாதுகாப்பு உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளார்.
சபாநாயகர் அப்பாவு
கடந்த வாரம் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. அந்த மணமக்களை சந்திக்க வந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு புதுக்கோட்டை ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் எல்லா வழிபாட்டு த் தலங்களிலும் அவரவர்கள் இஷ்டப்படி செல்கிறார்கள், அதுபோன்று பாதுகாப்பு உள்ள மாநிலம் தமிழ்நாடு, இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என்று கூறி உலக அளவில் செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் தான் நடைபெற்றது.
இந்தியாவில் 14வது தொழில்துறையில் இருந்த மாநிலம் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. உலக முதலீட்டாளர்கள் எந்த மாநிலத்தில் தொழில் முதலீடு செய்யலாம் என்று சொன்னால் அதற்கு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று கூறி அதிகப்படியானோர் வந்து கொண்டு உள்ளனர்.
பாதுகாப்பான மாநிலம்
அது அனைவருக்கும் தெரியும், இதற்குப் பிறகு சட்டம் ஒழுங்கு பாதிப்பு என்று கூறினால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்கக்கூடிய மாநிலம் தான் தமிழ்நாடு. தனிப்பட்ட முறையில் நடக்கும் பிரச்சினைகளுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.
ஒரு அரசின் மீது குற்றச்சாட்டு எப்போது சொல்ல வேண்டும் என்றால் ஒரு குற்ற சம்பவம் நடைபெற்று நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த அரசு சம்பவம் நடைபெற்ற அடுத்த நிமிடமே நடவடிக்கை எடுத்து யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சரியான நடவடிக்கை எடுத்து நீதிமன்றம்
முன்பு நிறுத்துகிறார்கள். காவல்துறை அவர்களால் முடிந்தவற்றை செய்து வருகின்றனர். நாமும் அவர்களுக்கு ஒத்துழைப்பு முடிந்த அளவு கொடுக்க வேண்டும். பல இடங்களில் ஒத்துழைப்பு குறையும் போது வழக்கை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இன்று பத்திரிகையாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர், நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்.
பெருமிதம்
நானும் பாதுகாப்பாக தான் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திலிருந்து வருகிறேன். இதற்கு மேல் என்ன பாதுகாப்பு வேண்டும். தனிப்பட்ட முறையில் நடைபெறும் சம்பவங்களை நாம் பெரிது படுத்தக்கூடாது எதிர்க்கட்சியினர் சட்டமன்றத்தில் அமர்ந்து பேச வேண்டும்.
கள்ளக்குறிச்சி விவகாரம் என்று கூறுகின்றனர் பிரதான எதிர்க்கட்சியின் பேச்சு ஒன்று கூட சட்டமன்றத்தில் பதிவாகவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. சட்டமன்றம் என்றால் அதற்கு ஒரு விதிமுறை உள்ளது. இந்திய அரசியல் சட்டப்படி பேரவை விதிப்படி இதுதான் சட்டமன்றம் கூடும்.
காலையில் கேள்வி நேரம் கேள்வி நேரத்திற்கு முன்பாகவே வெளியே செல்ல வேண்டும் என்று தகராறு செய்தால் நாம் என்ன செய்ய முடியும். ஜனநாயகத்தின் நான்காவது தூண் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும். நடக்கும் குற்ற சம்பவங்களை காவல்துறையினரிடம் ஊடகத் துறையினர் கொண்டு சென்று சேர்த்தால் சரியாக நடக்கும்” என்றார்.