இசையாய் மலர்ந்த எஸ்.பி.பி. - ஓராண்டு கடந்தும் நீங்கா நினைவுகள்

S. P. Balasubrahmanyam Indian playback singer first death anniversary
By Anupriyamkumaresan Sep 25, 2021 09:06 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

‘பாடும் நிலா’ என்ற அழைப்புக்குச் சொந்தக்காரர், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இம்மண்ணைவிட்டு மறைந்து இன்றோடு ஓராண்டு ஆகிவிட்டது. நாள்கள் சென்றதே தெரியாத அளவுக்கு, இன்றும் நம் இசையில் கலந்தே இருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

அவர் பாடியது போலவே, அந்தத் தேகம் மறைந்தாலும் அன்றாடம் இசையாய் மலர்கிறார் மனிதர். எஸ்.பி.பி.யின் வாழ்க்கையில், அசைக்கமுடியாத பக்கம், இளையராஜாவுக்கானது என்பதால், இளையராஜாவுடனான பாலுவின் பிணைப்பிலிருந்து இக்கட்டுரையை தொடங்கி முடிப்பதே சரியாக இருக்கும்.

இசையாய் மலர்ந்த எஸ்.பி.பி. - ஓராண்டு கடந்தும் நீங்கா நினைவுகள் | Spbalasubramaniyam Death Anniversary Today Article

“இளையராஜா எனக்காக இசையமைக்கவும், நான் அவருக்காக பாடவுமே இந்தப் பிறப்பை எடுத்திருக்கிறோம்” என ஒரு மேடையில் எஸ்.பி.பி.யே குறிப்பிட்டார். இளையராஜாவும் அதேபோல, “எஸ்.பி.பியும் நானும் ஸ்வரமும், இசையும் போன்றவர்கள்” என்றார். அந்தளவிற்கு இசையால் இணைந்த அந்தக் கூட்டணியில் உருவான பாடல்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன இளையராஜா இசையில் 2000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார் எஸ்.பி.பி.

அந்தவகையில் இளையராஜா - எஸ்.பி.பி கூட்டணி, இன்றும் ரசிகர்களை தங்கள் கட்டுக்குள் வைத்துள்ளது என்றே சொல்லலாம். இளையராஜாவுக்கும் எஸ்பிபிக்கும் இடையிலானது தனித்துவமான ராக பந்தம். இளையராஜா சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே, அவரும் எஸ்.பி.பி.-யும் இருவரும் நண்பர்களாக இருந்தனர். அந்தவகையில் மேடை கச்சேரிகளுக்காக இருவரும் இணைந்து பயணித்த நாள்கள் அதிகம்.

இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பே, எஸ்.பி.பி பாடகராகிவிட்டார். பின்னர் இளையராஜா சினிமாவில் அறிமுகமாகி ஜொலிக்கத் தொடங்கியபோது இருவரும் இணைந்து ரசிகர்கள் கொண்டாடும் படைப்புகளைத் தந்தனர். அதன்பிறகு இளையராஜா இசையமைத்த படங்கள் பெரும்பாலானவற்றில் ஏகாந்தமாய் ஒலித்தது எஸ்.பி.பியின் குரல்.

அந்தவகையில் இளையராஜாவும், எஸ்.பி.பி.யும் தலைமுறைகளை எல்லாம் தாண்டி தடம் பதித்தவர்கள். இப்புவி உள்ளளவும் இவர்களின் இசையும் குரலும் நிலைத்து நிறைக்கும்.

எஸ்.பி.பிக்கும் இளையராஜாவுக்கும் இடையில் சில முரண்கள் வந்திருக்கின்றன. ஆனால், அவை காலப்போக்கில் காற்றில் கரைந்து ஆதி நட்பு மட்டுமே நிலைத்திருக்கும். அந்த நட்புதான் எஸ்.பி.பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதே, இசையும் ஸ்வரமும் போலானவர்கள் தாங்கள் என இசைஞானியை கண் கலங்க வைத்தது.

ஒரு கட்டத்தில் நடிகர் மோகன் நடித்த படங்கள் எல்லாம் பெரும் வெற்றியடைந்தன. ‘வெள்ளி விழா’ நாயகனாக மோகன் கொண்டாடப்பட்டதற்கு பிராதான காரணமாக அமைந்தது இளையராஜா - எஸ்.பி.பி. கூட்டணி. கதையோடு பொருந்திய அந்தப் படங்களின் பாடல்கள் எல்லாம் எங்கேயும் எப்போதும் இளமை மாறாது இன்றும் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன.

இசையாய் மலர்ந்த எஸ்.பி.பி. - ஓராண்டு கடந்தும் நீங்கா நினைவுகள் | Spbalasubramaniyam Death Anniversary Today Article

பொதுவாக ஒவ்வொரு பாடகரின் குரலுக்கும் ஒவ்வொரு வகைப் பாடல்கள்தான் பொருந்தும். ஆனால், அப்படி எந்தவிதமான வரையறைகளுமின்றி எல்லா வகைமையிலும் அசத்தும் வல்லமை பெற்றவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். ரஜினியன் அறிமுகப்பாடலோ, கமலின் காதல் போடலோ அல்லது விஜயகாந்தின் புரட்சிப் பாடலோ... எல்லா உணர்வுமே அவருக்குள் இயல்பாய் இருக்கும்.

உணர்ச்சிகளின் குவியலான குரல்வளம் இருந்ததாலோ என்னவோ, ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற கதைகளின் முன்னனி நாயகர்களுக்காக மட்டுமன்றி அந்த காலத்தில் வில்லன் நடிகர்களாக இருந்தவர்கள், வெகு சில படங்களே நடித்த தொடக்க கால நடிகர்கள், துணை நடிகர்கள் என எல்லோருக்குமான குரலை வெளிப்படுத்தியிருக்கிறது எஸ்.பி.பி.யின் இசை.

இசையாய் மலர்ந்த எஸ்.பி.பி. - ஓராண்டு கடந்தும் நீங்கா நினைவுகள் | Spbalasubramaniyam Death Anniversary Today Article

அந்தக்குரலும் இசையும், இன்றும் என்றும் எப்போதும் நம் செவிகளிலேயே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தேயில்லை. இப்படி உணர்ச்சிகளின் குரலுக்குச் சொந்தக்காரராய் விளங்கி, கடந்த வருடம் இதேநாளில் சங்கீத மேகத்தில் கலந்த பாடும் நிலாவுக்கு, இதயம் கணத்த நினைவஞ்சலிகள். காலம் அவரை பிரித்தாலும், காற்றில் தவழ்ந்து கொண்டே இருக்கும் அவரது தேன்குரல்.