காய்கறி என நினைத்து எலியின் தலையை சாப்பிட்ட நபர் - அதிர்ச்சி தகவல்
காய்கறி என நினைத்து உணவில் இருந்த எலியின் தலையை தவறுதலாக சாப்பிட்டதாக இளைஞர் தெரிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் சூப்பர் மார்க்கெட்களில் குளிர்பதன பெட்டிகளில் சேமிக்கப்படும் காய்கறிகள், இறைச்சி என உணவுப் பொருட்களைத் தான் பெரும்பாலும் மக்கள் வாங்கி சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். இவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பேக்கிங் செய்யும் போது சரியான முறையில் கவனிக்காமல் அஜாக்கிரதையாக செயல்படுவதாக அவ்வப்போது புகார் எழுவது வழக்கம்.
அந்த வகையில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வாங்கிய உணவுப் பொருளில் இறந்துபோன எலியே இருந்துள்ளது. அதை கவனிக்காத அந்த இளைஞர் அதை சாப்பிட்ட பின்னர் ஏதோ சாப்பிடக்கூடாத ஒரு பொருளை சாப்பிட்டுவிட்டதாக அவருக்கு தெரிய வந்துள்ளது.
ஜூவான் ஜோஸ் என்ற அந்த இளைஞர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இருந்து உறைந்த காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை வாங்கி வந்துள்ளார். அந்த உணவுப் பொருட்களை சமைத்து முடிந்த அந்த இளைஞர் அதை ஒரு தட்டில் போட்டு சாப்பிடத் தொடங்கியுள்ளார்.
அப்போது தட்டில் ஏதோ கருப்பாக இருந்த பொருளை ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு சாப்பிட்ட போது அது மிகவும் வித்தியாசமாகவும், மொறுமொறுப்பாகவும் இருப்பதை உணர்ந்தார். அதேசமயம் தட்டில் இருந்த உணவில் இரண்டு கண்கள் தன்னையே பார்ப்பதை கவனித்த ஜூவான் ஜோஸ் திடுக்கிட்டுள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் அதைக் காட்டியபோது அவருடைய தட்டில் இருந்தது இறந்துபோன எலி என கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக குறிப்பிட்ட அந்த சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தினர் மீது ஜூவான் ஜோஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.