எந்த பொருளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றவில்லை: எஸ்.பி.வேலுமணி
எனது வீட்டில் எந்த பொருளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றவில்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி தற்போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், அதிமுக சட்டப் பேரவை கொறடாவாகவும் பதவி வகித்து வருகிறார்.
இவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். வருமானத்தை விட கூடுதலாக 58.23 கோடிக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பத் துறையினர் வழக்குப் பதிவு செய்து நடத்தப்பட்ட சோதனையில் ரூ.84 லட்சம் பணம், 11.15 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி, சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் எஸ்.பி. வேலுமணி கிரிப்டோகரன்சியில் ரூ.34 லட்சத்திற்கு முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சோதனை நடைபெற்றுள்ளதாகவும், எனது வீட்டில் இருந்து எந்த பொருளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் னால் நகை பணம் கைப்பற்றப்பட்டதாக தவறான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதுபோன்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்கொள்வோம் என எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.