எஸ்பி வேலுமணியின் வங்கி கணக்கு முடக்கம்: போலீசார் அதிரடி
முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்கை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்பட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் ஊழல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் நேற்று முன்தினம் சோதனை நடத்தினா்.
அதில், கணக்கில் வராத ரூ.13 லட்சம் ரொக்கப் பணம், ரூ.2 கோடி மதிப்பிலான ஆவணங்கள், கணினிகள், ஹாா்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்ந்து எஸ்.பி.வேலுமணிக்கு நெருங்கிய நண்பரான சந்திரபிரகாசுக்கு சொந்தமான கே.சி.பி என்ஜினீயர்ஸ் நிறுவனம், மதுக்கரை அடுத்த பாலத்துறையில் உள்ள வி.எஸ்.ஐ.எம்.சான்ட்குவாரியில் நேற்று 2-வது நாளாக சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக எஸ்.பி. வேலுமணியில் வங்கி கணக்குகள் மற்றும் லாக்கர்களை லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் முடக்கியுள்ளனர்.
மேலும், பறிமுதல் செய்த சொத்து ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.