என்னை அரசியலை விட்டே விலக்க நினைக்கின்றார் ஸ்டாலின் : எஸ்.பி. வேலுமணி குமுறல்
ஸ்மார்ட் சிட்டி விவகாரத்தில் ஆதிமுக அரசு முறைகேடு செய்திருப்பதாக கடந்த ஆட்சி காலத்தில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.
அதற்கு பதிலளிக்காமலே மௌனம் காத்து வந்த அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சரும், அ.தி.மு.க கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி தற்போது அது குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில் :
முதல்வர் ஸ்டாலின் சாலைகளைச் சீரமைக்க உத்தரவிடுவார் என்று எதிர்பார்த்தோம். நாங்கள் ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் கோவைக்குத் தேவையான திட்டங்களைச் செய்திருக்கிறோம்.
மின்சாரத்துறை அமைச்சர் பல்வேறு பகுதிகளில் மக்கள் சபை நடத்தி பொதுமக்களிடம் மனு வாங்கியது ஆரோக்கியமான செயல். அதேநேரத்தில், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கோவையில் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த சாலை திட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
கோவை மாவட்டத்தை தி.மு.க புறக்கணிக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது? ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை.
தி.மு.க அரசு சரியாகத் தூர்வாரி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே வெள்ளத்துக்குக் காரணம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, நான் உட்பட முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்து ரெய்டு நடத்தினார்கள்.
எனக்குச் சம்பந்தமே இல்லாத பலரின் இடங்களில் ரெய்டு நடத்தினார்கள். அதனால், உடல்நிலை சரியில்லாத என் அம்மா, தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த என் மகள், உதவியாளர் என்று எல்லோரும் பாதிக்கப்பட்டனர். முதல்வரின் தனிப்பட்ட கோபத்தால், என் மீது அதிகமாக வழக்கு போடப்பட்டது.
சட்டசபைத் தேர்தலைத் தொடர்ந்து, நகர்ப்புற மாநகராட்சி தேர்தலில் கோவை எங்களுக்குச் சாதகமாக இருக்கிறது. தேர்தலின்போது, நான் இங்கு இருக்கக் கூடாது. கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டிருப்பதாக எனக்குத் தகவல் வந்திருக்கிறது.
முதல்வர் நான் அரசியலிலேயே இருக்கக் கூடாது என்று நினைக்கிறார். கைது செய்து சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை" என ஆதங்காம பேசினார்.
மேலும் அவர், "கோவைக்கு பல்வேறு திட்டங்களைக் கொடுத்திருக்கிறோம். நாங்கள் நீதியரசரைக் கடவுளாக நம்புகிறோம். காவல்துறை எங்களைத் தொடர்ந்து மிரட்டிக் கொண்டுதான் இருக்கிறது. என்மேல் எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் சந்திக்கத் தயார். கட்சித் தொண்டர்கள் எங்களுக்கு உண்மையாக இருக்கிறார்கள்.
அதேபோல, கோவை மக்களும் எங்களுக்குத் துணையாக இருப்பார்கள். அதனால், கோவை மாவட்டத்தை அரசு புறக்கணிக்கக் கூடாது. ரத்து செய்யப்பட்ட வளர்ச்சி பணிகளுக்கு மீண்டும் உத்தரவு போடாவிட்டால் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" என்றார்.