எஸ்.பி.பி-க்கு விரைவில் மணிமண்டபம் கட்டப்படும் - மகன் சரண் தகவல்! ரசிகர்கள் உற்சாகம்
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என இந்தியாவின் பல மொழிகளில் பாடல்களை பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர் எஸ்.பி பாலசுப்பிரமணியம். 40 ஆயிரம் பாடல்கள், ஆறு தேசிய விருதுகள், ஒரே நாளில் 21 பாடல்கள் என எவரும் செய்திட முடியாத சாதனையை நிகழ்த்திக் காட்டினார்.
எஸ்.பி.பி. பாடகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தார். திரைப்படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். ஏ.ஆர் ரகுமான் முதல் அனிருத் வரை பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
பத்மஸ்ரீ, பத்மபூஷன் என இந்திய அரசின் மிக உயரிய விருதுகளையும் பெற்றார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் மக்களின் மனதை ஆக்கிரமித்திருந்த எஸ்.பி.பி இம்மண்ணை விட்டு மறைந்து ஓராண்டு ஆகிவிட்டது.
இசையமைப்பாளர்களும் சினிமா பிரபலங்களும் எஸ்.பி.பி உடனான தங்களது நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், எஸ்பிபி க்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.
எஸ்பி பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தாமரை பக்கத்தில் அவரது மகன் சரண் அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கொரோனா பாதிப்பின் காரணமாக ஏராளமான மக்களை உள்ளே அனுமதிக்க முடியவில்லை.
அதற்கான ஏற்பாடுகளையும் செய்யவில்லை. அப்பா மீது கொண்ட அன்பினால் எல்லாரும் இங்கு வந்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.