என்னது நீலகிரி ஆட்சியரை மாத்திட்டாங்களா? - புது ஆட்சியர் இவர்தான்...!

நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனி சிறப்பு அதிகாரியாக பதவி வகித்த  இன்னசென்ட் திவ்யா கடந்த  2017ஆம் ஆண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார் 

ஆட்சியராக பொறுப்பேற்ற பிறகு சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மை இந்தியா பணியை சிறப்பாக முன்னெடுத்தது என பொதுமக்களிடையே அவரது பணிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து, யானை வழித்தடங்களை மீட்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த மூவர் குழுவோடு இணைந்து ஆக்கிரமிப்பு செய்த ரிசார்ட்டுகளை எல்லாம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யும் பணிகள் நடந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், ''உச்சநீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் அவரை இடமாற்றம் செய்யக் கூடாது'' என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதன்பின்னர் யானை வழித்தடங்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந்த வழக்கில் இடைக்கால மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. அதில் நிர்வாக ரீதியிலான பணிகளை மேற்கொள்வதற்கு இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்வது அவசியமாகிறது எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 16ஆம் தேதி இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கியது.இதையடுத்து நீலகிரியின் பொறுப்பு ஆட்சியராக கீர்த்தி பிரியதர்ஷினி நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை காலை 10 மணிக்கு நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அம்ரித் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாக ஆட்சியர் அம்ரித் நகராட்சி நிர்வாகத்தின் இணைய ஆணையராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்