இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவான ஓவர்களை வீசிய நியூசிலாந்து - என்ன காரணம்?

இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. 

கான்பூரில் இன்று தொடங்கிய இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதன்படி களம் கண்ட இந்திய அணி வீரர்களில் சுப்மன் கில் (52), ஸ்ரேயாஸ் அய்யர்(75), ஜடேஜா(50) ரன்கள் விளாச முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் குவித்துள்ளது. 

மைதானத்தில் மாலை 4 மணிக்கே பனிப்பொழிவு தொடங்கியதால் சூரிய வெளிச்சம் இல்லை. இதனால் உயர்மின் விளக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்த வெளிச்சத்தில் சிவப்பு நிற பந்த தெரியாததால் மாலை 3.30 மணிக்கு மேல் நடுவர்கள் வெளிச்சம் சரியாக இருக்கிறதா என லைட் மீட்டர் கருவியை வைத்து சோதனை செய்தனர்.

அப்போது, நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், வேகப்பந்துவீச்சாளர் ஜேமிசனை பந்துவீச அழைத்தார். அப்போது அதனை தடுத்த நடுவர்கள் வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற வெளிச்சம் இல்லை என்றும் சழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினர். 

இதற்கிடையில் போதிய வெளிச்சம் இல்லாதது குறித்து நடுவர் நிதின் மேனன், நியூசிலாந்து வீரர் டிம் சவுதியிடம் கூறினார். அப்போது நடுவர் நிதின் மேனன் கூலிங் கிளாஸ் அணிந்திருந்தார். இதனை பார்த்த சவுதி, எதுக்கும் கூலிங் கிளாஸை கழற்றி பாருங்கள், அப்போது வெளிச்சம் தெரியும் என கிண்டலாக கூறினார். உடனடியாக நடுவரும் கண்ணாடியை கழற்றிவிட்டு இப்போதும் வெளிச்சமாக இல்லை என்று நகைச்சுவையாக கூறினார். 

இதன் பின்னர் சழற்பந்துவீச்சாளர் சோமர்வெயில் பந்துவீச, அதனை ஸ்ரேயா ஐயர் இறங்கி வந்து சிக்சர் அடித்தார். இதனை பார்த்த வில்லியம்சன் நடுவர்களிடம் முறையிட முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் நாள் ஒன்றுக்கு 90 ஓவர்கள் வீச வேண்டும் என விதிகள் உள்ள நிலையில் நியூசிலாந்து அணி 84 ஓவர் மட்டுமே வீசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்