2ஆவது ஒருநாள் போட்டி: வாழ்வா? சாவா? கட்டாயத்தில் இந்தியா

South Africa Vs India One Day Match
By Thahir Jan 21, 2022 04:20 AM GMT
Report

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

பார்ல் நகரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி அதே பார்ல் நகரில் இன்று நடக்கிறது.

தொடரை இழக்காமல் இருக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது.

முந்தைய ஆட்டத்தில் இந்திய அணியின் மத்திய வரிசை பேட்ஸ்மேன்கள் ஜொலிக்கத் தவறினர். தவறுகளை சரிசெய்து, வெற்றி பெறும் முனைப்பில் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  

ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்ஆப்பிரிக்கா ஒரு நாள் தொடரை வெல்வதிலும் தீவிரம் காட்டுகிறது.

முதலாவது ஆட்டத்தில் கிடைத்த வெற்றி அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கை அளித்துள்ளது. எனினும் தென்ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று 2ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது.

இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் பவுமா, வென்டர் டுசன் ஆகியோர் சதம் அடித்து தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு உதவினர்.

இந்திய அணியில் எந்த வீரரும் அதுபோன்று நிலைத்துநின்று ஆடவில்லை. ஷிகர் தவான், கோலி ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ஆடினர்.

இன்றைய ஆட்டத்தில் முன்வரிசை வீரர்கள் பெரியஅளவில் ரன்கள் அடித்தால் தான் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.