தென்னாப்பிரிக்காவை ஓட விட்ட ஷர்துல் தாகூர் - ஆனாலும் இந்திய அணிக்கு சிக்கல்
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 229 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. பெரும் எதிர்பார்புகளுடன் தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்த நிலையில் இன்று 2 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணியில் அதிகப்பட்சமாக கீகன் பீட்டர்சன் 62 ரன்களும், டெம்பா பவுமா 51 ரன்களும் விளாச அந்த அணி முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 229 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரே இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்த பும்ரா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
இதனையடுத்து 27 ரன்கள் பின் தங்கியுள்ள இந்திய அணி தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாட தொடங்கியது. கேப்டன் கே.எல்.ராகுல் 8 ரன்களும், மயங்க் அகர்வால் 23 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து புஜாரா- ரஹானே ஜோடி நிதானமாக விளையாடியது.
இந்நிலையில் 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 35 ரன்களும், ரஹானே 11 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இன்னும் 3 நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.