கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவா? சௌமியா சுவாமிநாதன் விளக்கம்
சாதாரண சளி காய்ச்சலுக்கு வீட்டில் உள்ள இஞ்சி, மிளகு, துளசியே போதும் என சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
சௌமியா சுவாமிநாதன்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சௌமியா சுவாமிநாதன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கொரோனா தடுப்பூசி
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் உடலில் பாதிப்புகள் ஏற்படுவதாக வரும் தகவல்கள் தவறானது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்குதான் இதய நோய், நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அதில் 10 லட்சம் பேரில் ஒருவருக்கு பக்க விளைவுகள் ஏற்படும். கோவிட் தடுப்பூசியிலும் அதே போல் பக்கவிளைவு ஏற்படும். சிலருக்கு சாதாரணமாகவும், சிலருக்கு வீரியமாகவும் இருக்கும்.
கொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிக அளவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மக்கள் எடுத்துக் கொண்டனர். பாக்டீரியா தொற்று இல்லாமலே அதிக அளவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மக்கள் பயன்படுத்துக்கும் போது அந்த கிருமிகள் அந்த மருந்துக்கு கேட்காமல் உருமாற்றம் அடைந்து விட்டது. இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் ஒரு நோய் தொற்று வந்தால் கூட நம் கையில் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் இருக்காது.
ஆண்டிபயாட்டிக் மருந்துகள்
பொதுவாக ஆண்டிபயாட்டிக் மருந்துகள் குறித்து விழிப்புணர்விற்கான தேவை ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், சளி போன்றவை ஏற்பட்டால் அவை தொற்றாக பரவுகிறது. அதற்கு பாராசிட்டாமல் மாத்திரை, வீட்டில் பயன்படுத்தும் இஞ்சி, மிளகு, துளசி போன்றவற்றை எடுத்துகொண்டாலே காய்ச்சல் சளி போன்றவை ஒரு வாரத்தில் குறைந்து விடும்.
காய்ச்சல் சளி போன்றவற்றிற்கு ஆண்டிபயாட்டிக் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். பாக்டீரியா தொற்று என மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாராசிட்டாமல்
மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாட்டிக் கொடுக்கக் கூடாது என மருந்து கடைகளில் கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும். ஆண்டிபயோடெக் மருந்துகளின் அட்டையில் சிவப்பு நிறத்தில் குறியீடு போடப்பட வேண்டும். அதன் மூலம் பொது மக்களும் எளிதில் தெரிந்துக் கொள்ள முடியும். பாராசிட்டாமல் மாத்திரைகளை சாதாரண காய்ச்சலுக்கு பயன்படுத்தலாம்.
ஆனால் அதிகளவில் பயன்படுத்தக் கூடாது. பொதுவாக எல்லா மருத்துங்களிலும் பக்கவிளைவுகள் உண்டு. கிட்னி பிரச்சனை வரும். தினமும் 10 பாராசிட்டாமல் மாத்திரைகளை பயன்படுத்தினால் கண்டிப்பாக பிரச்சனை வரும். மிருகங்களிருந்து வரும் நோய் தொற்று வருங்காலங்களில் அதிகரித்து கொண்டே போகும்" என பேசினார்.