நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் திருட்டு - திருடனை வளைத்து பிடித்த போலீசார்

நடிகர் சூரி இல்ல விழாவில் திருடி கைதான நகைக்கடை உரிமையாளர் கிக்குக்காகவும், விளம்பரத்திற்காகவும் திருடுபவர் என போலீசார் கூறினர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் மணிவாசகம். இரண்டு நகைக்கடைகள் நடத்தி வருகிறார். இவரது மகன் விக்னேஷ், 29; பட்டதாரி.

சமீபத்தில் மதுரையில் நடந்த நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமணத்தில் நகை திருடப்பட்டவழக்கில், விக்னேஷை மதுரை போலீசார், கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது: இரண்டு நகைக் கடைகளுக்கு சொந்தக்காரரான விக்னேஷ் விளம்பர பிரியர். மதுரை, சென்னையில் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்கி முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்களுடன் நெருங்கி பழகி, புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தில்லாலங்கடி திரைப்படத்தில், ஜெயம் ரவி பாணியில் திருடுவதில், 'கிக்' தேடியுள்ளார்.சில மாதங்களுக்கு முன், மதுரையில் நடந்த போலீஸ் உயர் அதிகாரியின் மகள் பிறந்தநாள் விழாவில் விக்னேஷ் பங்கேற்றார்.

அதிகாரி மகள் அணிந்திருந்த வைர நெக்லசை திருடினார். இதை கவனித்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுபோல், இவர் மீது 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. இவற்றை ஒரு பொருட்டாக கொள்ளாமல், புல்லட்டில் பரமக்குடியில் வலம் வருவார்.

வசதியான குடும்பத்தில் வசதியாக வாழ்ந்து வரும் விக்னேஷ் பொழுது போக்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் இதுபோன்ற திருட்டுகளில் ஈடுபடுவது, விசாரணை நடத்திய போலீசாரை வியப்படைய செய்துள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்