தியேட்டரில் வெளியாகும் சூரரைப்போற்று - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் சூர்யா நடித்து ஓடிடியில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் தியேட்டரில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்களை 50% இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் விரைவில் புதுப்படங்கள் ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பொதுமக்களை தியேட்டர்களுக்கு வரவைக்கும் பொருட்டு வெற்றியடைந்த பழைய படங்களை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த சூரரைப்போற்று திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி நேரடியாக அமேசான் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
கேப்டன் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த திரைப்படம் நடிகர் சூர்யாவுக்கும், ஓடிடி ரிலீசை எதிர்த்த திரையரங்கு உரிமையாளர்களுக்கும் மிகப்பெரிய கருத்து வேறுபாட்டை உண்டாக்கியது.
படம் பார்த்த அனைவரும் சூரரைப்போற்று தியேட்டரில் வெளியாக வேண்டிய படம் என கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கிடைக்கும் முழுத்தொகையும், திரையரங்கு உரிமையாளர்களும் திரையரங்கு உரிமையாளர் சங்கமும் பகிர்ந்துகொள்ள 2டி நிறுவனம் முன்மொழிந்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தால் வரும் வாரம் சூரரைப்போற்று திரையரங்கில் வெளியாக வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.