மோடி அரசு கொரோனாவை கையாள்வதில் தோற்றுவிட்டது - சோனியா காந்தி காட்டம்
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. கேரளாவிலும், அசாமிலும் ஆட்சியை பிடிக்கத் தவறியது, மேற்கு வங்கத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸின் மோசமான முடிவுகள் குறித்து விவாதிக்க சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடியது.
அதில் பேசிய சோனியா காந்தி, “காங்கிரஸ் கட்சியின் தோல்வி வருத்தமளிக்கிறது. கேரளாவிலும் அசாமிலும் காங்கிரஸ் ஆளும் கட்சியை வீழ்த்த முடியாமல் போனது ஏன். தேர்தல் முடிவுகள் பற்றிய ஆராய குழு அமைக்கப்படும்.
இது அசௌகரியமான பல முடிவுகளை தரும். ஆனால் நாம் யதார்த்தத்தை உணரவில்லையென்றால் எந்த பாடமும் கற்க முடியாது.
நாட்டில் கொரோனா நிலைமை கட்டுப்படுத்த முடியாத பேரிடராக மாறிவிட்டது. மோடி அரசின் நிர்வாக தோல்வி அப்பட்டமாகிவிட்டது.
நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்பு முழுவதுமாக செயலிழந்துவிட்டது. மோடி அரசு தன்னுடைய கடமையிலிருந்து நழுவிக் கொண்டது. மாநில அரசுகளிடம் தடுப்பூசிக்கான சுமையை வழங்குவது நியாயமற்றது.
மோடி அரசுக்கு வேறு பல விஷயங்களில் தான் கவனமும் முன்னுரிமையும் உள்ளது. மக்கள் விருப்பத்திற்கு எதிராக டெல்லியில் புதிய நாடாளுமன்றம், பிரதமர் வீடு கட்டும் பிரம்மாண்ட திட்டத்தை செயல்படுத்தி வருகிறது” என்றார்.