பைக் வாங்கி தருமாறு மிரட்டிய இளைஞர் - தந்தை கண்முன்னே உடல் கருகிபலி
பைக் வாங்கி தர கேட்டு தந்தையை மிரட்டிய இளைஞர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.
பைக் கேட்டு வாக்குவாதம்
சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த முருகன்(42) கட்டிடக்கழிவுகளை தரம் பிரிக்கும் பணி செய்து வருகிறார். இவருக்கு 19 வயதில் ஜீவா என்ற மகன் உள்ளார்.
ஜீவா தனக்கு பைக் வாங்கி தருமாறு அடிக்கடி தந்தையிடம் வாக்குவாதம் செய்து வந்துள்ளார். ஆனால் அவரது தந்தை பைக் வாங்கி தர மறுத்துள்ளார்.
தந்தையிடம் மிரட்டல்
இதனையடுத்து, மதுரவாயல் மேட்டுக்குப்பம் சாலையில் முருகன் வேலை செய்யும் ஷெட்டிற்கு சென்ற ஜீவா, அங்கு இருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை கேனில் பிடித்து, பைக் வாங்கி தரவில்லை என்றால் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து விடுவேன் என தந்தையை மிரட்டி உள்ளார்.
சற்று நேரத்தில் பெட்ரோலை தன் மேல் ஊற்றிக் கொண்டு, அங்கு குளிர் காய்வதற்காக மூட்டி வைக்கப்பட்டிருந்த தீயின் அருகே சென்று தீயில் இறங்கிவிடுவேன் என மிரட்டி கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகஜீவாவின் உடலில் தீ பற்றியது.
உயிரிழப்பு
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த முருகன் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மணல் மற்றும் துணியைக் கொண்டு தீயை அணைத்து, சிகிச்சைக்காக ஜீவாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜீவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.