மகன் சாவில் மர்மம் - பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் - உடலை தோண்டி எடுத்ததால் பரபரப்பு
திருப்பத்தூர் அருகே, மகன் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் உடலை தோண்டி எடுத்து மருத்துவர்கள் மறு கூறு ஆய்வு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ரகுபதியூர் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் சாந்தி. இவர்களின் மகன் நவீன் குமார் (29). இவர் அதே பகுதியில் அழகுநிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு குரும்பேரி கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் மகள் விசித்ரா (23) என்பவருடன் கடந்த 8 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு மோனிஷ்(4) என்கிற மகனும், தன்ஷிகா( 2) என்ற மகளும் உள்ளனர். மனைவி விசித்ராவின் அத்தை மகன் குமாரம்பட்டி பகுதியை சேர்ந்த சீனிவாசன் (24) என்பவருடன் நண்பர்களாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் விசித்ரா மற்றும் சீனிவாசன் இருவருக்குமிடையே கள்ள காதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து கடந்த 4ம் தேதி விசித்ரா மற்றும் சீனிவாசன் இருவரும் சேர்ந்து நவீன் குமார் வாயில் நுரையுடன் மயக்க நிலையில் இருக்கிறார் என்று கூறி நவீன் குமாரின் தந்தை முருகனிடம் கூறியுள்ளனர்.
அதன் பின்னர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற பொழுது பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே நவீன் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதன் பேரில் 2 நாட்களுக்கு முன்பு நவீன் குமரை அடக்கம் செய்தனர்.
இதனால், முருகன் தனது மருமகள் மீது உள்ள சந்தேகத்தின் பேரில் தொலைபேசி ஆராய்ந்தபோது அதிக நேரம் சீனிவாசனுடன் விசித்ரா பேசியுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து, விசித்ரா தான் தனது மகன் கொலைக்கு காரணம் எனக் கூறி திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் முருகன் மற்றும் உறவினர்கள் புகார் அளித்தனர்.
இது குறித்து, போலீசார் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அடக்கம் செய்த நவீன் குமார் உடலை தோண்டி எடுத்து மறு உடற்கூறு ஆய்வு செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று நேற்று பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக இன்று திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவபிரகாசம் முன்னிலையில் திருப்பத்தூர் கிராமிய போலீஸார் பாதுகாப்புடன் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவர் கலைச்செல்வியுடன் 4 பேர் கொண்ட குழு நவீன் குமார் உடலை தோண்டி எடுத்து மறு உடற்கூறு ஆய்வுக்குத் தேவைப்படும் உடல் பாகங்களை எடுத்துச் சென்றனர்.
மேலும், மறு உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே நவீன் குமார் கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.