இஸ்ரோவின் புதிய தலைவராக மூத்த விண்வெளி ஆய்வாளர் எஸ்.சோமநாத் நியமனம்

isro new head s.somnath sivan retires
By Swetha Subash Jan 12, 2022 01:57 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக மூத்த விண்வெளி ஆய்வாளர் எஸ்.சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவர் விண்வெளித்துறையில் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இஸ்ரோ தலைவராக இருக்கும் கே.சிவனின் பதவிக் காலம் வரும் ஜனவரி 14 அன்று முடிவடையவுள்ளது.

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியாற்றி வரும் சோமநாத் இதுகுறித்து பேசிய போது,

`இந்தியாவில் விண்வெளிக்கென மையம் ஒன்று தனியாக உருவாக்கி அதில் அனைத்து பங்குதாரர்களான மத்திய விண்வெளித் துறை, இஸ்ரோ, இன்-ஸ்பேஸ்,

தொழிற்சாலைகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதே எனக்கு முன்னால் இருக்கும் முக்கிய பொறுப்பு.

இதன்மூலம் விண்வெளி ஆய்வைப் பெரியளவில் மாற்றுவதே லட்சியம்’ எனக் கூறியுள்ளார்.

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இயக்குநராகப் பணியாற்றுவதற்கு முன்பாக அவர் லிக்விட் ப்ரொபல்ஷன் சிஸ்டம்ஸ் செண்டர் என்ற நிறுவனத்தில் இரண்டரை ஆண்டுகள் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

ராக்கெட் எஞ்சின் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தில் தேர்ந்தவரான சோமநாத் சந்திராயன் - 2 விண்கலம் தரையிறங்குவதற்கான தொழில்நுட்பத்தையும்,

ஜிசாட் - 9 விண்கலத்தின் தொழில்நுட்பத்தையும் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்.

`இந்தியாவில் விண்வெளித்துறையை வளர்ச்சியின் பாதைக்குக் கொண்டு செல்ல ஒட்டுமொத்த விண்வெளித் திட்டத்தையும்

மத்திய அரசு முன்வைத்திருக்கும் தொலைநோக்குத் திட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்வதும் எனது முக்கிய குறிக்கோள்களுள் ஒன்று.

இதற்குத் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ எனவும் இஸ்ரோவின் புதிய தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள டி.கே.எம் பொறியியல் கல்லூரியில் கல்வி பெற்ற சோமநாத், விண்வெளி குறித்த பொறியியல் படிப்பில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார்.

1985-ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் சேர்ந்த சோமநாத், பி.எஸ்.எல்.வி ஏவுகணை உருவாக்குவதில் ஈடுபட்டார்.

ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வடிவமைப்புத் திட்டத்தில் 2003ஆம் ஆண்டு பணியாற்றிய சோமநாத், இந்த ராக்கெட்டின் ஒட்டுமொத்த வடிவமைப்பு முதல் அது வானில் பறப்பது வரையிலான பொறுப்பை ஏற்று செயல்பட்டவர்.

2014-ம் ஆண்டு செலுத்தப்பட்ட `கேர்’ என்ற திட்டம் இவரது தலைமையின் கீழ் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

`வானில் ராக்கெட் செலுத்துவதற்கான பொறியியல் துறையில் வல்லுநரான இவர், பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி எம்.கே 3 முதலான ராக்கெட்களின் வடிவமைப்பு முதல் பிற தொழில்நுட்பங்களை அவற்றில் சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியவர்’ என விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.