CSK டீம்ல வாய்ப்பில்ல; உதவி தான் செய்றேன்; எரிச்சலா இருக்கு - மிட்சல் சான்ட்னர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து மிட்சல் சான்ட்னர் பேசியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 11 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ளது. அதில் 6 வெற்றிகள், 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
மீதமுள்ள 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்றால் சென்னை அணி எளிதாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து விடும். கடைசியாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மிட்சல் சான்ட்னர். இந்த போட்டியில் 3 ஓவர்களை வீசி வெறும் 10 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார். இதனால் சென்னை அணியின் பிளேயிங் 11-ல் சான்ட்னரை தொடர்ந்து சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எரிச்சலாக இருக்கும்
ஆனால், கடந்த 2018-ம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் அவர், இதுவரை 16 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்நிலையில் சென்னை அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து பேசிய சான்ட்னர் "சிஎஸ்கே அணிக்காக அனைத்து நேரங்களிலும் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் இருப்பது சோகத்தை அளிக்கிறது.
சில நேரங்களில் பெஞ்சில் இருப்பதே எரிச்சலாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து விளையாடாமல் இருக்கும் போது கவனத்தை குவிப்பதே கடினமாக இருக்கும். அதனால் அந்த நேரத்தில் மற்ற இளம் வீரர்களுக்கு உதவி செய்வேன். பயிற்சியாக இருந்தாலும், போட்டியாக இருந்தாலும் சக வீரர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்துவேன்" என்று தெரிவித்துள்ளார்.