'சொல்லின் செல்வர்' சோ.சத்தியசீலன் காலமானார் - ஏராளமானோர் இரங்கல்
மூத்த தமிழறிஞரும் தமிழ்நாட்டின் தலைசிறந்த இலக்கியவாதிகளில் ஒருவருமான சோ.சத்தியசீலன் திருச்சியில் உடல்நலக் குறைவால் காலமானார்.
பள்ளி ஆசிரியராக தனது தமிழ் பணியை தொடங்கிய இவர், வள்ளலார் குறித்து ஆய்வில், சென்னைப் பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். திருச்சி தேசியக் கல்லூரியில் பயின்று, அதே கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்த சோ.சத்தியசீலன் பின்னர், உருமு தனலட்சுமி கல்லூரியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். பட்டிமன்ற பேச்சாளர், சொற்பொழிவாளர், வர்ணணையாளர், தொகுப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட இவர், வானொலி, தொலைக்காட்சி மற்றும் பல்லாயிரக்கணக்கான பட்டிமன்ற மேடைகளில் பேசியவர்.
அமெரிக்கா, கனடா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், குவைத், பாரீஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று தமிழ் பணியாற்றியவர். வள்ளலார் குறித்து இவர் பேசிய தொகுப்பு 6 ஒலி நாடாக்களாக வெளிவந்துள்ளன.
மேலும் தமிழக அரசின் கலைமாமணி, சொல்லின் செல்வர் விருதுகளை பெற்றவர். மறைந்த முதல்வர்கள் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் நட்பு பாரட்டியவர். இலக்கிய அமைப்புகளிடம் இருந்து கம்பக் காவலர் விருது, கம்பன் விருது, சடையப்ப வள்ளல் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். குன்றக்குடி அடிகளாரால் நாவுக்கரசர் என்ற பட்டமும் பெற்றவர்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.