திடகாத்திரமான ஆண்மகன் வேண்டும்: 73 வயதில் மாப்பிள்ளை தேடும் பாட்டி- உருக்கமாய் முன்வைத்த கோரிக்கைகள்
இந்தியாவில் 73 வயது மூதாட்டி ஒருவர் தனக்கு மாப்பிள்ளை வேண்டும் என்று விளம்பரம் கொடுத்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூரைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி, அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று, தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார். வயது முதிர்ந்த நிலையில் தற்போது அவர் மறுமணம் செய்ய முன்வந்துள்ளார்.
இதற்காக ஆரோக்கியமான, திடகாத்திரமான 73 வயதுக்கு மேற்பட்ட ஆண்மகன் தன்னை அணுகலாம் என்று விளம்பரம் செய்துள்ளார். தான் தனிமையில் இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், அதன் காரணமாகவே மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், 73 வயதான பிராமண வகுப்பை சேர்ந்த மாப்பிள்ளை வேண்டும் என்றும் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தனக்கு 13 வயதில் திருமணம் நடந்தது. ஆனால் அந்த திருமணம் சில ஆண்டுகளிலே முடிவுக்கு வந்துவிட்டது. நான் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன். பின் என்னுடைய பெற்றோருடனேயே வசித்து வந்தேன். நன்றாக படித்தேன். அரசு வேலை கிடைத்தது. என் பெற்றோரை நன்றாக கவனித்து கொண்டேன்.
சொந்த வீடு வாங்கினேன். வயதான எனது பெற்றோர் தற்போது உயிருடன் இல்லை. இதனால் நான் தனிமையில் இருந்து வருகிறேன். என்னுடைய பெரிய வீட்டில் நான் ஒருவள் தனியாக இருப்பது என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. தனிமை என்னை மிகவும் வாட்டுகிறது. இதன் காரணமாகவே நான் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.
எனக்கு பிள்ளைகள் இல்லை. நல்ல உடல் ஆரோக்கியத்துடன், திடகாத்திரமாக இருக்கும் 73 வயதுக்கு மேற்பட்டவர் மணமகனாக கிடைத்தால்தான் அது எனக்கு பொருத்தமாக இருக்கும்.
அவர் என் மனதை புரிந்து கொண்டு எனக்கு ஆறுதலாக இருப்பார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.