'சோலார் பேனல் மோசடி வழக்கு':சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை
கோழிக்கோடு 'சோலார் பேனல்' மோசடி வழக்கில், நடிகை சரிதா நாயருக்கு, ஆறு ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோழிக்கோடு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தைசேர்ந்தவர், சரிதா நாயர்.திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய நகரங்களில், 'சோலார் சிஸ்டம்ஸ்' என்ற பெயரில், சூரிய மின் உற்பத்தி தகடுகள் அமைக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில் 2012 ல் கோழிக்கோடைச் சேர்ந்த அப்துல் மஜீத், போலீசில் அளித்த புகாரில் சோலார் பேனல் வசதி செய்து தருவதாக கூறி, என்னிடம், 42 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக சரிதா நாயர், அவரது கூட்டாளி பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீதுகூறியிருந்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு விசாரணை, கோழிக்கோடு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயர், நீதிமன்றம் பலமுறை, 'சம்மன்' அனுப்பியும், சரிதா நாயர் ஆஜராகவில்லை.
அவரை கைது செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது, இரண்டாவது குற்றவாளியான சரிதா நாயருக்கு, ஆறு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. முதல் குற்றவாளியான பிஜு ராதாகிருஷ்ணன், கொரோனா தொற்று காரணமாக, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதனால், அவருக்கான தண்டனை விபரம் நிறுத்தி வைக்கப்படுகிறது என நீதிபதி கே.நிம்மி தீர்ப்பளித்தார்.