இஸ்லாமிய உரிமைகளுக்காக நிற்கும் எஸ்டிபிஐ(SDPI) கட்சி - வரலாறும் பின்னணியும்!!
எஸ்டிபிஐ(SDPI)
எஸ்டிபிஐ என அறியப்படும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (Social Democratic Party of India) கட்சி 21 ஜூன் 2009 டெல்லியில் வைத்து இ.அபுபக்கர் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்திய அரசால் உபா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்னும் அமைப்பின் அரசியல் பிரிவாக எஸ்டிபிஐ செயல்படுகிறது. இது ஒரு இஸ்லாமிய மக்களுக்கான கட்சியாக அறியப்படுகிறது.
கட்சியின் தற்போதைய தேசிய தலைவராக எம்.கே.ஃபைசி உள்ளார். தமிழ்நாடு மாநில தலைவராக முகமது முபாரக் உள்ளார். கட்சியின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமைந்துள்ளது.
முஸ்லிம்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க போராடுவதே எஸ்டிபிஐயின் நோக்கம் என அறிவித்தது.
செயல்பாடுகள்
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 படி 25% இடங்களை தனியார் பள்ளிகள் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்படுவதை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தினர். குடியுரிமை திருத்த சட்ட நகலை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
1992 ல் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில புனரமைத்து தர வேண்டும் என்று டிசம்பர் 2016 ல் நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
தேர்தல் களத்தில்
2014 நாடாளுமன்ற தேர்தல்
2014 ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆறு மாநிலங்களில் 29 வேட்பாளர்களை நிறுத்தியது. போட்டியிட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது.
2019 நாடாளுமன்ற தேர்தல்
2019 ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆறு மாநிலங்களில் 15 வேட்பாளர்களை நிறுத்தியது. போட்டியிட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது.
2024 நாடாளுமன்ற தேர்தல்
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. வேட்பாளராக முகமது முபாரக் போட்டியிடுகிறார்.
தமிழ்நாடு
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஐந்து தொகுதியில் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
2016 ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் என்று அறிவித்தது. பின்னர் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டாமல் கூட்டணியில் இருந்து விலகி, 30 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் அப்போதைய தமிழ்நாடு மாநில தலைவர் தெகலான் பாகவி அறிவித்தார்.
போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணியில் இணைந்து, ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
புதுச்சேரி
2016 புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
கேரளா
2011 கேரளா சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து 80 தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
2015 ல் நடை பெற்ற கேரளா உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு 32 கிராம ஊராட்சி வார்டுகள், 7 நகராட்சி வார்டுகள், ஒரு நகராட்சி வார்டு என 40 இடங்களில் வென்றது. 2016 கேரளா சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து 82 தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 75 கிராம ஊராட்சி வார்டுகள், 1 ஒன்றிய கிராம ஊராட்சி வார்டு, 18 நகராட்சி வார்டுகள், 1 மாநகராட்சி வார்டு என 95 இடங்களில் வென்றது.
பிகார்
2020 ல் நடைபெற்ற பிகார் மாநில சட்டமன்றதேர்தலில் பப்பு யாதவின் ஜான் அதிகார் கட்சி தலைமையிலான முற்போக்கு ஜனநாயக கூட்டணியில் இனைந்து 14 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதிகளில் கூட வெல்லவில்லை.