சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி காலமானார்

stanswamy passes
By Irumporai Jul 05, 2021 10:44 AM GMT
Report

எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி காலமானார் .

திருச்சியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி. 84 வயதான இவர், மகாராஷ்டிரா எல்கர் பரிஷத் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு , கடந்த 2020ஆம் ஆண்டில் உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

உபா சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டதால், இவருக்கான ஜாமீனும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாநோயினால் அவதிப்பட்டு வந்த இவருக்கு நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மும்பையிலுள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அங்கு அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமானதால், நேற்று முன்தினம் முதல் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த தகவலை அவரது வழக்கறிஞர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்தனர். பழங்குடியினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த ஸ்டேன் சுவாமிக்கு உரிய மருத்துவச் சிகிச்சை வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் சமீபத்தில் தான் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது.