தமிழகத்தில் ஆண்டுக்கு 15 ஆயிரம் பேர் தற்கொலை - அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் ஆண்டுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்வதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சமூகநீதி நாள் உறுதிமொழி மற்றும் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு மாதம் உறுதிமொழி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் எடுக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலக தற்கொலைத் தடுப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நேரத்தில் தமிழகத்தில் ஆண்டுக்கு தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரம் முதல் 16 ஆயிரமாக உள்ளது. விபத்துகளினால் இறப்பவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரம் முதல் 12 ஆயிரமாக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தற்கொலை செய்துகொள்பவர்கள் என்ன காரணத்தினால் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று அதற்கு கவுன்சிலிங் கொடுக்கலாம். பால்டாயில், எலிமருந்து, சாணிபவுடர் போன்றவற்றை பயன்படுத்தியும் தற்கொலை செய்துகொள்கின்றனர் எனவும் அவர் கூறினார்.
குறிப்பாக இந்த சாணிப் பவுடரில் விஷத்தின் அளவு கூடுதலாக இருப்பதால், அதைச் சாப்பிடுபவர்களை காப்பாற்றவே முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனவே சாணி பவுடர் தயாரிக்கிற நிறுவனங்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, மிக விரைவில் சாணிப் பவுடர் தமிழகத்தில் தயாரிப்பதற்கு தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.