கேரளாவில் வெயில் காரணமாக வீடுகளுக்குள் புகும் பாம்புகள்
கேரளாவில் கடும் கோடை வெயில் காரணமாக பாம்புகள் வீடுகளுக்குள் புகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
வெப்ப அலை தாக்கம் காரணமாக தரை மற்றும் புதர்கள் அதிகமாக சூடாகி, பாம்புகள் குளிர்ச்சியான இடங்களைத் தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வர தொடங்கியுள்ளன.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் 54 பேர் பாம்புக் கடிக்கு உள்ளாகியுள்ளனர். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குளிர்ச்சியான இடங்களைத் தேடி பாம்புகள் வீடுகளின் மூலைகள், படுக்கையின் கீழ் போன்ற இடங்களில் ஒளிந்து கொள்கின்றன.
வீடுகளுக்குள் புகுந்து மறைந்திருக்கும் விஷப்பாம்புகளை மக்கள் தெரியாமல் மிதிப்பது காரணமாக அதிகமாக கடிவாங்குகின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் தூங்க கூட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனைதொடர்ந்து சுகாதாரத்துறை, வீட்டைச் சுற்றியுள்ள புதர்ககளை அகற்றவும், இரவில் தரையில் தூங்காமல், கட்டிலில் தூங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

பாம்பு கடித்தால் பதற்றமடையாமல், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆன்டி-வெனம் மருந்துகள் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், பாம்புகளை கண்டால் அவற்றை பிடிக்க அல்லது அடிக்க முயற்சிக்க வேண்டாம் என்று வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதற்குப் பதிலாக வனத்துறையினரையோ அல்லது பாம்பு பிடி நிபுணர்களையோ தொடர்பு கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.