நல்ல பாம்புடன் 4 நாட்கள் வாழ்ந்த மூதாட்டி - பரபரப்பு சம்பவம்
கர்நாடக மாநிலத்தில் வீட்டுக்குள் புகுந்த நாகப் பாம்புடன் 4 நாட்களாக மூதாட்டி ஒருவர் வசித்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாம்புடன் 4 நாட்கள் வாழ்ந்த மூதாட்டி
கர்நாடகா மாநிலம், குளஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி மௌனிஷ் கம்பாரா. இவரின் கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்து விட்டார். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இந்த மூதாட்டியின் வீட்டிற்குள் ஒரு நல்ல பாம்பு ஒன்று வந்துள்ளது.
அப்போது, அந்த மூதாட்டி பாம்பைப் பார்த்ததும் கத்தி, கூச்சலிடாமல் என் கணவர் என்னைப் பார்க்க வந்துள்ளதாக நினைத்துக் கொண்டுள்ளார். கடந்த 4 நாட்களாக அந்த பாம்பிற்கு பால் ஊற்றி வளர்த்து வந்துள்ளார். அந்த பாம்பும் அந்த மூதாட்டியை ஒன்றும் செய்யாமல் வீட்டின் ஒரு ஓரத்தில் இருந்து வந்துள்ளது. அந்த பாம்புடன் இந்த மூதாட்டி தூங்கியும் இருக்கிறார்.
கண்ணீர் விட்டு அழுத மூதாட்டி
இது குறித்து அக்கம், பக்கத்தினருக்கு தெரியவந்தது. உடனே வனத்துறையினருக்கு அக்கம், பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். மௌனிஷ் வீட்டிற்கு வந்த வனத்துறையினர் பாம்பை பிடிக்க முற்பட்டனர். அப்போது, அந்த மூதாட்டி அய்யோ... பாம்பை பிடித்து போகாதீங்க... அது என் கணவர்.. யாரையும் அந்த பாம்பு ஒன்றும் செய்யாது என்று கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
மூதாட்டியை வனத்துறையினர் எவ்வளவோ சாமாதானப்படுத்தினாலும், அந்த மூதாட்டி கண்ணீர் வடித்து கையெடுத்து கும்பிட்டார். இதனால், பாம்பை பிடிக்கும் முயற்சியை கைவிட்டு, வனத்துறையினர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். மூதாட்டி பாம்புடன் இருப்பதால், அக்கம், பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் சற்று பீதியுடனே இருக்கின்றனர்.