10 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும் : அமைச்சர் கே.என்.நேரு

By Irumporai May 05, 2022 06:20 AM GMT
Report

தமிழ்நாட்டில் 10 நகரங்களில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினா – விடை நேரத்தில் எம்.எல்.ஏ-க்களின் கேள்விகளுக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து பேசினார்.

அப்போது, மதுரை உள்ளிட்ட 10 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பணிகளில் சில காலம் தொய்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்த அவர், தற்போது ஒவ்வொரு நகரமாக ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், மதுரை உள்பட 10 நகரங்களிலும் விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அடுத்ததாக, பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு குழாய்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதால் திட்டப்பணிகள் தாமதமாவதாகவும், மாற்று ஏற்பாடு செய்தவுடன் பணிகள் விரைந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

வடசென்னை பகுதிகளில் கழிவுநீர் குழாய் கட்டமைப்பை மறுசீரமைக்க ரூ.3,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும் எனவும், குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.