கர்நாடகாவில் பெய்த ராட்சத ஆலங்கட்டி மழை- ரூ. 1 கோடி மதிப்பிலான திராட்சை தோட்டம் நாசம்
கர்நாடகா மாநிலம் சிக்பள்ளாப்பூரில் பெய்த ராட்சத ஆலங்கட்டி மழையால் அரசின் ரூ. 1 கோடி மதிப்பிலான திராட்சை தோட்டம் நாசமானது.
கர்நாடகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் மழை பெய்ய தொடங்கும். அதற்கு முன்பு ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக பெங்களூரு, சிக்கமகளூரு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகத்தில் உள்ள மலைநாடுகளில் ஒன்றான சிக்கமகளூரு மாவட்டத்தில் சுமார் 2 மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது.
கடூர், பீரூர், அஜ்ஜாம்புரா ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றுடனும், இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. கடூரில் மின்னல் தாக்கி ஒரு வீடு சேதமடைந்தது. இதேபோல், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் முழுவதும் சூறாவளி காற்று, இடி-மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
இதனால், ராட்சத ஆலங்கட்டிகள் விழுந்ததால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்திருந்த திராட்சை பழங்கள் நாசமாகின. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்காலம் என கூறப்படுகிறது. சிந்தாமணி, சிக்பள்ளாப்பூர், சிட்லகட்டா, பாகேபள்ளி ஆகிய தாலுகாக்களில் சுமார் 4 மணி நேரம் பெய்த கன மழையால் மா மரங்கள், தென்னை மரங்கள் போன்றவையும் வேரோடு சாய்ந்தன.
தக்காளி, பப்பாளி போன்ற சாகுபடிகள் ஆலங்கட்டி மழையால் முழுவதும் நாசமாகின. குறிப்பாக சிக்பள்ளாப்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான திராட்சை தோட்டத்தில் 90 சதவிகித திராட்சைகள் நாசமாகின. இதனால், தோட்டக்கலைத்துறைக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள்.