சட்டைக்கு பட்டன் இருக்காது; ஆனால் அஜித் சார் என் தோளை பிடித்து சொன்னது.. எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி!
தனது சினிமா வாழ்க்கையில் நடிகர் அஜித் எவ்வளவு முக்கியமானவர் என்பது குறித்து எஸ்.ஜே.சூர்யா பேசியுள்ளார்.
எஸ்.ஜே. சூர்யா
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'வாலி' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா. தொடர்ந்து குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.
மேலும் அவர் இயக்கிய 'நியூ' என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த எஸ்.ஜே. சூர்யா தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தார். தற்போது பல படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் கலக்கி வருகிறார்.
அண்மையில் வெளியான 'மார்க் ஆண்டனி' படம் கூட இவர் நடிப்பிற்காகவே பெரும் வெற்றி பெற்றது. தான் கலந்து கொள்ளும் நேர்காணலில் எஸ்.ஜே. சூர்யா பேசுகையில் "எனக்கு முதன் முதலில் இயக்குநராக வாய்ப்பு கொடுத்தது நடிகர் அஜித் தான் என்றும் அவரால் தான் எனக்கு இப்போது சினிமாவில் இந்த இடம் கிடைத்துள்ளது" என்றும் பல நேர்காணலில் கூறியுள்ளார்.
நெகிழ்ச்சி பேட்டி
அந்த வகையில் ஒரு நேர்காணலில் நடிகர் அஜித் குறித்து எஸ்.ஜே. சூர்யா பேசுகையில் "இன்றைக்கு ஒரு நல்ல சட்டை ஒரு டீசெண்டான பேண்ட் போட்டு இந்த நேர்காணலில் உட்கார்ந்திருக்கேன். ஆனால் அந்த காலத்தில் என்னுடைய சட்டையில் பட்டன் இருக்காது, பின் குத்தியிருப்பேன். கால் செருப்பில் ஹூக் மாட்டியிருப்பேன்.
அப்போது என்னுடைய தோளை இறுக்கமாக பிடித்து நிறுத்தி "என்னோட இயக்குநர்" என்பார் அஜித் சார். இன்று அஜித் சார் இவ்வளவு பெரியா ஆளாக இருப்பதற்கு ஒரே காரணம், நான் அவரிடம் அடையாளம் கண்ட அதே விஷயத்தை தமிழ்நாட்டு மக்களும் அடையாளம் கண்டுள்ளனர். இதுதான் உண்மை, இதை நான் வெறும் பேச்சுக்காக சொல்லவில்லை.
அஜித் சார் என்னை அடையாளம் கண்டது அவரின் ஆசை படத்தில் நான் உதவி இயக்குநராக பணிபுரிந்த போது. "நாளை நான் பெரிய ஹீரோ ஆனால், இவனை இயக்குநர் ஆக்க வேண்டும்" என்று அஜித் சார் அன்றே நினைத்தார். என்னுடைய வாழ்க்கை எனும் கனவுகளின் திரியில் முதல் முறை விளக்கேற்றி வைத்தது அஜித் சார் தான்" என்று எஸ்.ஜே. சூர்யா பேசியுள்ளார்.