வீட்டு வேலை பார்த்த16 வயது சிறுமி கொலை - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
16 வயது சிறுமியை அடித்து கொலை செய்த வழக்கில் கணவன் மனைவி உட்பட 6 பேரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை
சென்னை அமைந்தகரை மேத்தா நகர் சதாசிவ மேத்தா தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஷ் - நாசியா தம்பதியினர். இவருக்கு 6 வயதுக் குழந்தை ஒன்றும் உள்ளது.இந்த நிலையில், நவாஸ் வீட்டில் கடந்த ஓராண்டுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
அவப்போது சிறுமியைக் கணவன் மனைவி மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்டோர் கொடுமைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சுழலில் தீபாவளியன்று குளியலறையில் இறந்துகிடந்துள்ளார். உடனே, இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர்கள் வீட்டுக்குச் சென்றுள்ளனர். பின், மறுநாள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதில், சிறுமியின் உடலில் பல்வேறு காயங்கள் மற்றும் தீக்காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமிக்கு முறையாகச் சம்பளம் கொடுக்கவில்லை.
அடித்து கொலை
அவரது தாயார் பார்க்கவும் அனுமதிக்கவில்லை. தீபாவளி தினத்தன்று வீட்டில் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி முகமது நவாஸ்,நாசியா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சிறுமியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சிறுமி குளியலறையில் மயங்கி விழுந்து இறந்து போனது தெரியவந்துள்ளது.
மேலும் சிறுமி இறந்து ஒரு நாள் ஆகிவிட்டதால் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. அதனை மறைக்க வீடு முழுவதும் வாசனைத் திரவியங்களைத் தெளித்துள்ளனர். இந்த சம்பவத்தில் மனைவி நாசியா மற்றும் அவரது நண்பர் லோகேஷ், அவரது மனைவி ஜெயசக்தி, சீமா, மகேஸ்வரி ஆகிய 6 பேரைக் கைது செய்தனர்.
இதனையடுத்து ஆறு நபர்கள் மீதும் கொலை வழக்கு உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில், வரும் நவம்பர் 16ஆம் தேதி வரை 6 பேரையும் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது.