கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற பட்டதாரி பெண் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றதாக 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
வெளிமாநிலங்களில் இருந்து கூரியர் மூலம் சென்னையில் போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனை செய்யும் கும்பல் செயல்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த கும்பல் போதை மாத்திரை என்று வலி நிவாரணி மாத்திரைகளை விற்பதும் தெரியவந்தது.
டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரைகளை விற்கக்கூடாது என்ற சூழலில் இந்த கும்பல் சட்டவிரோதமாக இம்மாத்திரைகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியது. இதற்காக மாணவர்களுக்கு இடையே ‘வாட்ஸ்அப்’ குழு அமைத்து மாத்திரைகளை இந்த கும்பல் சப்ளை செய்வதும் தெரியவந்தது.
இக்கும்பலைச் சேர்ந்தவர்களை கூண்டோடு கைது செய்ய கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்ட நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டு வந்தது. இதனிடையே கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கு இடமாக வந்த 2 பேரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை போட்டபோது அதற்குள் அதிக போதை தரும் வலிநிவாரணி மாத்திரைகளான டைடல், நைட்ரவிட் போன்றவை ஏராளமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அசோக்நகரைச் சேர்ந்த கிஷோர், கே.கே.நகரைச் சேர்ந்த கிஷோர்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை கொத்தவால்சாவடியைச் சேர்ந்த பூங்குன்றன் , ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி , தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைகுண்டைச் சேர்ந்த கோகுலன் , சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜலட்சுமி ஆகிய மேலும் 4 பேர் கைதானார்கள். அவர்களிடம் இருந்து 4 ஆயிரத்து 620 நைட்ரவிட் மாத்திரைகள், 2 ஆயிரத்து 220 டைடல் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான ராஜலட்சுமி தான் கல்லூரி மாணவர்களிடம் பழக்கத்தை ஏற்படுத்தி போதை மாத்திரைகளை விற்பதற்கு மூளையாக செயல்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.