பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, போக்சோ சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சிவங்கர் பாபாவை, டெல்லியில் சிபிசிஐடி போலீசார், நேற்று கைது செய்தனர்.
பின்னர், விமானம் மூலம், அவரை சென்னை அழைத்து வந்தனர். எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவல கத்தில், 10 மணி நேரத்திற்கும் மேலாக சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடைபெற்றது.
அப்போது, பாலியல் புகார் தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்திற்கு பிறகு, சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
முன்னதாக, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.