சிவசங்கர் பாபாவுக்கு மீண்டும் 15 நாள் நீதிமன்ற காவல் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவை மீண்டும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் முதல் வழக்கு செங்கல்பட்டில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிவசங்கர் பாபா, நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
இன்றோடு 15 நாள் நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்த நிலையில், இன்று மீண்டும் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிவசங்கர் பாபாவை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.