PSBB பள்ளியைத் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் சாமியாரின் பள்ளி - முன்னாள் மாணவர்கள் அதிர்ச்சி தகவல்
சென்னையில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது மாணவர்கள் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆசிரியர் ராஜகோபால் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகிறது.
தற்போது கைதாகியுள்ள ராஜகோபால் பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வாக்குமூலமாக அளித்துள்ளார். பிஎஸ்பிபி பள்ளி... மாணவர்களின் புகார் மீது தொடர்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.
பிஎஸ்பிபி பள்ளியைத் தொடர்ந்து பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மீதும் மாணவர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். அனைத்து குற்றச்சாட்டுகளும் உரிய முறையில் புகாராக பெறப்பட்டு விசாரிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் உரிமையாளர் சிவ சங்கர் பாபா மீதும் முன்னாள் மாணவர்கள் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சிவசங்கர் பாபா தன்னைத் தானே கடவுள் எனக் கூறிக்கொண்டு வலம் வரும் சாமியார்.
திருப்பத்தூரைச் சேர்ந்த புரோகிதர் ஷர்மா ஐயரின் மகன் தான் சிவசங்கரன். முப்பது வருடங்களுக்கு முன் பிழைப்பு தேடி சென்னை வந்தவர். மண்ணடி, மலையப்பன் தெருவில் லாரி ஷெட்டில் வேலை பார்த்த சிவசங்கரன், காவி உடை அணிந்து பூஜைகள் செய்ய ஆரம்பித்தார்.
பின்னர் ஆன்மிக தொழில் பிரபலமாகவே தொலைக்காட்சிகளில் தோன்றி பேச ஆரம்பித்தார். அப்படி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் யாகவா முனிவரும், சிவசங்கர் பாபாவும் கலந்து கொண்டு விவாதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கடும் வாக்குவாதமாகி கைகலப்பில் முடிந்ததால் சிவசங்கர் பிரபலமாக ஆரம்பித்தார்.

இதனால் கிடைத்த புகழை தன்னுடைய அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி அறுவடை செய்ய ஆரம்பித்தார் சிவசங்கர். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் 64 ஏக்கர் நிலத்தை வாங்கி அந்த இடத்திற்கு ராமராஜ்ஜியம் எனப் பெயரிட்டார். அதே பகுதியில் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியையும் தொடங்கினார்.
இங்கு உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் தங்கிப் படித்து வருகின்றனர். அதே வளாகத்தில் சிவசங்கர் தங்கும் இடமும் அமைந்துள்ளது. பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்துவதை வழக்கமாக வைத்து வந்த சிவசங்கர் பாபா தன்னை கடவுள் எனக்கூறி மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வார் என முன்னாள் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டில் மேலும், “இதற்கு பள்ளி ஆசிரியர்கள் பலரும் உடந்தையாக இருந்த தகவலும் தெரியவந்துள்ளது. பள்ளி வளாகத்திலேயே உள்ள அவருடைய இல்லத்தில் மாணவிகளை அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதை வெளியே தெரிவித்தால் டிஸ்மிஸ் செய்துவிடுவோம் என மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் மிரட்டி வந்துள்ளார்.
பல்வேறு மாணவர்கள் பள்ளியிலிருந்து டிஸ்மிஸும் செய்யப்பட்டுள்ளனர். அதையும் மீறி புகார் அளிக்க யாராவது முன்வந்தால் அந்தப் பகுதியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளை தன்வசம் வைத்துக் கொண்டு புகார் அளித்தவர்களை மிரட்டியுள்ளார் சங்கர் பாபா” என்று முன்னாள் மாணவர்கள் பரபரப்பான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது பல முன்னாள் மாணவர்களும் புகார் அளிக்க முன்வந்துள்ள நிலையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி விசாரணை நடத்தினார். அடுத்தநாள் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் கௌரி அசோகன் நான்குபேர் கொண்ட குழுவுடன் விசாரணை நடத்தச் சென்றார்.
கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாததால் அடுத்தகட்டமாக அவர்களின் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவசங்கர் பாபா அப்போது பள்ளி வளாகத்தில் இல்லை என்பதால் அவரையும் நேரில் விசாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.