சிவன்மலை கோவில்! ஆண்டவன் உத்தரவு பெட்டியில் குங்குமம் வைத்து வழிபாடு
சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று முதல் குங்குமம் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருவதால், வீடுகளில் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூரின் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு என்று தனிச்சிறப்பு உள்ளது, அதாவது இங்குள்ள ஆண்டவன் பெட்டியில் கனவில் வரும் பொருளை வைத்து வழிபட்டால் நன்மைகள் நடக்கும், தீமைகள்- ஆபத்துகள் விலகிச்செல்லும்.
அதாவது, முருகனே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி, அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.
உத்தரவு பெற்ற பக்தர், கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சுவாமியிடம் பூபோட்டு கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும்.
அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள பொருள் உத்தரவு பெட்டியில் இருக்கும்.
இந்நிலையில் நேற்று பக்தரின் கனவில் குங்குமம் வந்துள்ளது, எனவே குங்குமத்தை வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது, குங்குமம் வைக்கப்பட்டுள்ளதால் நல்லதே நடக்கும், இனிவரும் காலங்களில் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறலாம் என பக்தர்கள் கூறுகின்றனர்.