பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பரிதாப மரணம் - சிவகாசியில் தொடரும் துயரம்
சிவகாசி அருகே சரஸ்வதி பாளையத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் உள்ளன.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அங்கு பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து இடங்களுக்கும் இங்கிருந்தே பட்டாசுகள் விநியோகம் செய்யப்படுகின்றன.
பட்டாசு தயாரிப்பதையே மையமாகக் கொண்டு இயங்கிவரும் சிவகாசியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த ஆலைகளில் வெடி விபத்து ஏற்படும் துயர சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.
கடந்த ஒன்பது மாத காலத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் வெடிவிபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் அச்சங்குளத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கடந்த ஜூன் மாதம் தாயில்பட்டியில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து வீடுகள் சேதம் அடைந்து 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த வாரம் கூட ஒரு விபத்து நேர்ந்தது. எஸ்பிஎம் தெருவில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வெடி விபத்துக்களை தடுக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சிவகாசியில் மேலும் ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. சிவகாசி அருகே சரஸ்வதி பாளையத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்கு பணியாற்றி வந்த சின்ன முனியாண்டி என்னும் தொழிலாளி ஒருவர் உடல்கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விரைந்து சென்ற போலீசார் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.