டான் படத்தின் ரிலீஸ் தேதி அதிரடி மாற்றம் - காரணம் என்ன?
அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் அடுத்த படமான டான் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி சிவாங்கி, ஆர்ஜே விஜய், எஸ் ஜே சூர்யா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், டான் திரைப்படம் மார்ச் மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது இதே தேதியில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவான RRR படமும் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.
சிறிது தினங்களுக்கு முன்னர் டான் திரைப்படம் மே மாதம் 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.
டான் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய திரையுலகில் மிகப்பெரிய இயக்குனர் ராஜமவுலி அவர்கள் இயக்கத்தில் RRR திரைப்படம் மார்ச் 25 ஆம் தேதி வெளிவர இருக்கிறது, அதே தேதியில் சிவகார்த்திகேயன் நடித்த டான் படமும் வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள RRR திரைப்படம் வெளியாவதை கருத்தில்கொண்டு, டான் ரிலீஸ் தேதியை மாற்றுவதற்கு ஒப்புக்கொண்ட சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். டான் படம் வருகின்ற மே 13ம் தேதி உலகமெங்கும் வெளியாகும்" என்று தெரிவித்துள்ளது.