தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் 'கலக்க போவது யாரு?' நிகழ்ச்சியில் போட்டியாளராக தனது பயணத்தைத் தொடங்கினார்.
இதனையடுத்து, காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சியின் போட்டியாளராக, தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நடிகராக காலடி எடுத்து வைத்தார்.
இன்று தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல்வேறு திறமைகளை வெளிக்காட்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில் மனுவில்,`மிஸ்டர் லோக்கல்' படத்திற்கு பேசப்பட்ட 15 கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்துள்ளார். மீதம் ரூ.4 கோடியை தரவில்லை. அந்தத் தொகையை டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்த உத்தரவிட வேண்டும்.
அவர் சம்பள பாக்கியை தரும் வரை நடிகர்கள் விக்ரம் மற்றும் சிம்பு படங்களை விநியோகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை வரும் 31-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி எம்.சுந்தர் அறிவித்துள்ளார்.