என்னால் நம்ப முடியவில்லை - புனீத் ராஜ்குமார் சமாதியில் சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி

sivakarthikeyan puneetrajkumar
By Petchi Avudaiappan Nov 01, 2021 11:50 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் சமாதிக்குச் நேரில் சென்று நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார். 

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த நடிகர் புனீத் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த புனீத் ராஜ்குமாரின் உடலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

வெளிநாட்டில் இருந்த அவரின் மகளின் வருகை தாமதமானதால் அவரது இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யஷ்வந்த்பூர் அருகிலுள்ள கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் தந்தை ராஜ்குமாரின் நினைவிடம் அருகில் புனீத் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள் அசோக், சோமண்ணா, முனிரத்னா உள்ளிட்டோரும் மலர்வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் கண்டீரவா ஸ்டுடியோவில் புனீத் ராஜ்குமார் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு, புனித் ராஜ்குமார் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், புனீத்தின் மறைவை இன்னமும் நம்ப முடியவில்லை. ஒரு மாதத்துக்கு முன்பு புனித் ராஜ்குமாருடன் பேசியிருந்தேன். மிகச் சிறந்த மனிதர். சிறந்த ஆன்மா. அவருடைய மறைவு திரையுலகு முழுவதுக்கும் பெரும் இழப்பு. அவருக்கு இறப்பு கிடையாது.

அவருடைய நல்ல விஷயங்கள் நினைவு கூறப்படும். இனிவரக்கூடியவர்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணம். திரையில் மட்டுமல்ல, திரைக்கு பிந்தைய வாழ்க்கைக்கும் அவர் முன்னுதாரணமாக திகழ்வார். பெங்களூரு வந்தால் என்னை சந்திக்கவேண்டும் என்று கூறினார். நான் இப்போது பெங்களூருவில் இருக்கிறேன். அவரைப் பார்க்க முடியவில்லை. அவருடைய மறைவின் அதிர்ச்சியிலிருந்து வெளிவர முடியவில்லை என உருக்கமாக தெரிவித்தார்.