சேவ கூவிடுச்சு அதான் , அதிகாலை என நினைத்து நள்ளிரவில் விற்பனை செய்த விவசாயி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கிராமத்து விவசாயி ஒருவர் சேவல் கூவிய உடன் பொழுது விடிய போகுது என நினைத்து நள்ளிரவு நேரத்தில் கீரை, காய்கறிகளை விற்பனை செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வைரவன். ( வயது 75 ) இவர் தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை பறித்துக்கொண்டு திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே தினமும் விற்பனை செய்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று அந்திசாயும், மாலை பொழுதில் தனது சொக்கநாதபுரம் தோட்டத்தில் இருந்து பறித்துக் கொண்டு வரப்பட்ட கீரை மற்றும் வாழைத்தண்டு, வாழைக்காய், பிரண்டை, முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளுடன் திருப்பத்தூருக்கு வந்து நள்ளிரவில் வந்து அண்ணாசிலை அருகில் ஒரு சாக்குப்பையை விரித்து கிராமத்து விவசாயி வைரவன் அடுக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்தவர்கள் விசாரிக்க கீரைகள், காய்கறிகள் விற்பனை செய்வதற்காக வந்துள்ளேன் என கிராமத்து பாணியில் கூறினார். இதனையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு காய்கறி விற்க வந்திருக்கிறீர்களே என்று கேட்க மணி பார்க்க தெரியாது சேவல் கூவியது, பொழுது விடிய போகுது சீக்கிரம் வியாபரம் செய்வோம் என எழுந்து வந்தேன் எனக் கூறியதை அடுத்து திகைத்தனர்.
பின்பு சாலையில் சென்றவர்கள் கிராமத்து விவசாயி நிலைமையை புரிந்து வேடிக்கை பார்க்க வந்த அனைவரும் கீரை மற்றும் காய்கறிகளை நள்ளிரவில் வாங்கிச் சென்றனர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் கடையை எடுத்து ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள் அதிகாலையில் போட்டுக் கொள்ளலாம், இல்லையென்றால் மாடுகள் தொந்தரவு தாங்க முடியாது என்று கூறினார்.
பின்பு போலீசாரின் அறிவுரையை கேட்ட அந்த முதியவரான விவசாயி கடையை எடுத்து வைத்து விட்டு, அதிகாலையில் மீண்டும் கீரை மற்றும் காய்கறிகளை விற்பனை செய்தார். தமிழ்நாட்டில் வசிக்கும் பெரும்பாலான கிராமத்து விவசாயிகள் சூரிய உதயத்தை வைத்து காலத்தை கணக்கிடுவர். சூரிய உதயமாகும் பொழுது அதிகாலை சேவல் கூவியதை வைத்து இத்தனை ஆண்டுகளாக எழுந்து தனது பணிகளை பார்த்து வந்துள்ளார் வைரவன்.
சேவல் இரவில் கூவியதால் அதே பழக்க நினைவில் எழுந்துள்ளார்.
காலமும், தொழில்நுட்பமும் , சூழலும் எவ்வளவு மாறினாலும் இயல்பை மாற்றுதல் எளிதல்ல. கடிகாரத்தின் பின் ஓடாமல் இயற்கையை நம்பி வாழ்ந்து வரும் வைரவன் விவசாயி செயல் அவர் இத்தனை ஆண்டுகாலம் சூரிய உதயத்தை வைத்து , சேவல் கூவலை வைத்து வாழ்ந்து வந்தது மொபைலின் பின்னே ஓடிக்கொண்டிருக்கும் நம் தலைமுறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.