டீசி கேட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: சிவசங்கர் பாபா பள்ளியில் இருந்து வெளியேறும் மாணவர்கள்
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சிவசங்கர் பாபா நடத்திவரும் பள்ளியிலிருந்து மாணவர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்த நிலையில், தலைமறைவாக இருந்த அவரை தமிழக சிபிசிஐடி போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
இதனிடையே ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கும் சுஷில் ஹரி பள்ளியில் இருந்து தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிக்கு மாற்ற பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதன் எதிரொலியாக கடந்த 2 நாட்களில் 100க்கும் அதிகமான பெற்றோர் மாற்றுச் சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளனர். மேலும் ஆன்லைன் வகுப்புகளை முறையாக எடுப்பதில்லை என்றும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் பெற்றோர் தரப்பில் பள்ளியின் மீது புகார்கள் குவிந்து வருகின்றன.
அதேசமயம் பள்ளியில் பணிபுரியும் 12 ஆசிரியர்கள் பள்ளியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.