சமுதாயத்தில் காளான்களை போல் போலி சாமியார்களும்,குருமார்களும் பெருகியுள்ளனர் - நீதிபதி
சிவசங்கர் பாபா மீதான இரண்டு போக்சோ வழக்கில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு.
சுசில் ஹரி பள்ளியில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட 3 போக்சோ வழக்குகளில், சிவசங்கர் பாபாவை கடந்த ஜூன் 16 ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
சிவசங்கர் பாபாவின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் கணினி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியர்களான தீபா உட்பட 4 ஆசிரியர்களை நேரில் வரவழைத்து விசாரணையும் நடத்தினர். மற்றொரு ஆசிரியரான பாரதி வெளிநாட்டில் இருப்பதால் சிபிசிஐடி தரப்பில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 40 சாட்சியங்களின் அடிப்படையில் 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
இவரின் ஜாமீன் மனுக்களை செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி தண்டாயுதபாணி சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும் இவ்வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி மக்களின் மனதிற்குள் இருக்கும் பிரச்சைகளுக்கு தீர்வளிப்பதாகவும்,ரட்சிப்பதாகவும் கூறும் போலி சாமியார்களும்,மத குருமார்களும் சமுதாயத்தில் காளான்களை போல் பெருகியுள்ளனர் என்று தெரிவித்தார்.