சிவசங்கர் பாபாவிற்கு நிபந்தனை ஜாமீன் - பள்ளி வளாகத்திற்குள் நுழையக்கூடாது - உச்சநீதிமன்றம் உத்தரவு
சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் சாமியார் என்று சொல்லிக்கொண்டு, அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி டெல்லியில் சிவசங்கர் பாபாவை கைது போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, அவர் மீது 3 போக்சோ வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். 2 வழக்குகளில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனு தாக்கல் செய்திருந்தார்.
இரத்த கொதிப்பு, நீரிழிவு, இதயம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். முன் ஜாமீன் வழங்காமல், இந்த இரு மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இவ்வழக்கில் தனக்கு ஜாமீன் அளிக்க கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.
உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஜாமீன் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது, அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருக்கிறது. ஒருவேளை ஜாமீன் அளிக்கும் பட்சத்தில் அவர் சாட்சியங்களை கலைப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு. சிவசங்கர் பாபாவினால் வழக்கு விசாரணைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிவசங்கர் பாபாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் தொடர்புடைய பள்ளி வளாகத்துக்குள் சிவசங்கர் பாபா நுழையக்கூடாது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சாட்சிகளை கலைத்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று சிவசங்கர் பாபாவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.