இந்தியாவில் கொரோனாவில் நிலை மிகவும் மோசமாகி வருகிறது: சுகாதாரத் துறை அமைச்சர்
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 60,000-க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. முந்தைய அலையை விடவும் இரண்டாம் அலையின் கொரோனா பரவல் வேகம் அதிகமாக உள்ளது.
தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் மட்டும் 75 சதவிகிதத்துக்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என செய்திகள் பரவி வருகின்றன.
ஆனால் அதற்கு அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
ஆனால் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாட்டில் கொரோனா பரவலின் நிலை மோசம் என்பதிலிருந்து மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது என்றுள்ளார்.
மேலும் பரிசோதனைகளை அதிகரித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.